

இந்திய ரயில்வேயில் இயக்கப் படும் 13,349 பயணிகள் ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.
குறிப்பாக, மும்பை, சென்னை உட்பட ஏழு முக்கிய நகரங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் மின்சாரரயில்களில் மட்டும் சுமார் 1 கோடியே 23 லட்சம் பேர் பயணிக்கின்றனர். கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ரயில்வே துறை முதல்முறையாக பயணிகள் ரயில்களின் சேவையை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறுத்தியது. இதனால், ரயில்வேக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும்தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், பயணிகளின் ரயில்சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, வரும் ஏப்ரல் 10-ம்தேதிக்குள் 90 சதவீத ரயில்களைஇயக்க ரயில்வே வாரியம் மண்டலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தெற்கு ரயில்வேயில் குறிப்பாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் செல்ல வேண்டிய ரயில்களில் 90 சதவீதத்துக்கும் மேல் ஓடுகின்றன. வரும் நாட்களில் சிறப்பு ரயில்களும் பல்வேறு வழித்தடங்களில் அதிகரித்து இயக்கப்படும்’’ என்றார்.