

சென்னையில் ஹோலி பண்டிகை நேற்று முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மதுரை, கோவை, திருச்சி, சேலம். நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹோலி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது.
வசந்தகாலத்தை வரவேற்று, அன்பை பரிமாறிக்கொள்ளும் ஹோலி பண்டிகை நேற்று நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும்சவுகார்பேட்டை பகுதியில் காலை8 மணி முதல் வண்ணப் பொடிகளுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தொடங்கினர். பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கைகுலுக்கி ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் பலரும்வண்ணப் பொடிகளை தூவியபடி நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தனர்.
நாள் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். வண்ணப் பொடிகள் பூசியவாறு நண்பர்கள், குடும்பத்தினர் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு பணியில்ஈடுபட்டிருந்த போலீஸார், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தியபடி இருந்தனர். ஆனாலும், பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமல் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா அச்சம் காரணமாக, பொது இடங்களில் ஹோலி கொண்டாடியவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைவாகவே இருந்தது. இருப்பினும், சவுகார்பேட்டை பகுதிகளில் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் ஹோலி கொண்டாடினர். நேற்று மாலை புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் உறவினர்கள் வீடு,மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குதூகலித்தனர்.
வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும்ஹோலி பண்டிகை மிகுந்த உற் சாகத்துடன் கொண்டாடப்பட்டது.