

பாடகர் கோவனை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.
உடனே அவரை சிறையில் அடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவிட்டார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் பாடகர் கோவன் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸாரால் அக்டோபர் 30-ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மதுவிற்கு எதிராக பாட்டுப் பாடி வந்த இவர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை பெருநகர தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீஸார் மனுதாக்கல் செய்தனர். கோவனை இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி எஸ்.கணேசன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கோவன் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மில்டன் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் அனுமதி பெற்று, நீதிபதி சி.டி.செல்வத்திடம் முறையிட்டார்.
அதையடுத்து சென்னை கொரட்டூரில் உள்ள நீதிபதி சி.டி.செல்வம் வீட்டில் இவ்வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது கோவன் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜரானார்.
அதைத்தொடர்ந்து, பாடகர் கோவனை இரண்டு நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சென்னைப் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி சி.டி.செல்வம், கோவனை உடனே சிறையில் அடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.