Last Updated : 30 Mar, 2021 03:14 AM

 

Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

அதிமுக துணையுடன் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது பாஜக: பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

தமிழகத்துக்கு எதிராக பாஜக செயல்படுவதாகவும், அதற்கு அதிமுக ஆதரவாக இருப்பதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் பி.கே.சேகர்பாபு போட்டியிடுகிறார். இந்நிலையில் சேகர்பாபுவை ஆதரித்து சென்னை ஏழுகிணறு பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று பேசியதாவது: இந்த சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றி அமைப்பதாக உள்ளது. ஏனெனில், தற்போதுள்ள அதிமுக ஆட்சி

தன்னிச்சையாக செயல்படக்கூடியதல்ல. பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா கட்டுப்பாட்டில்தான் இந்த அரசு நடைபெற்று வருகிறது. இத்தகைய சுயசிந்தனையற்ற அரசை நாம் தூக்கி எறியவேண்டும். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசுகொண்டுவந்தபோது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதிமுக மட்டுமே வேளாண் சட்டங்களை ஆதரித்தது.

அதேபோல், குடியுரிமை திருத்தமசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை பாஜக அமல்படுத்தியுள்ளது. அதற்கு எல்லாம் அதிமுக ஆதரவு வழங்கி வருகிறது. மேலும், தமிழகத்தில் பாஜகவின் முகமாக அதிமுக செயல்படுவதை நாம் உணர வேண்டும்.

அதேநேரம் தமிழகத்துக்கு எவ்வித பலனும் இல்லை. தமிழகமக்களுக்கு எதிரான செயல்பாடுகளையே தொடர்ந்து பாஜக மேற்கொண்டு வருகிறது. எனினும், அத்தகைய பாஜக அரசுக்குதான் அதிமுக சாதகமாக இருக்கிறது.

துறைமுகம் தொகுதியில் பாஜக நேரடியாக களம் காண்பது நமக்கு கிடைத்த நல்வாய்ப்பாகும். எனவே, இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் டெபாசிட் இழப்பதை உறுதிசெய்து, திமுக வேட்பாளர் சேகர்பாபுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, திமுக வேட்பாளர் பி.கே.சேகர் பாபு மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அண்ணாநகர் வேட்பாளர் எம்.கே.மோகன் (திமுக) மற்றும் பெரம்பூர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் (திமுக) ஆகியோரை ஆதரித்து நேற்று மாலை அந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரகாஷ் காரத் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது, ‘‘அதிமுகவுக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு மறைமுகமாக பாஜகவுக்கு தான் செல்லும். எனவே, தமிழக நலனை முன்னிறுத்தி திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x