

ஜெயலலிதா, கருணாநிதி, கமல்ஹாசன் மட்டும் தான் ஹெலிகாப்டரில் வர முடியும் என்ற பிம்பத்தை உடைக்கவே, ஹெலிகாப்டரில் பிரச்சாரத்துக்குச் செல்வதாக பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்ஹரிநாடார் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் பனங்காட்டுப்படை சார்பில் பிரச்சாரம் செய்வதற்காக கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா, ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் ஆகியோர் நேற்று தூத்துக்குடியிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் இறங்குதளத்தில் வந்து இறங்கினர். அவர்களை வரவேற்க 200-க்கும் மேற்பட்ட ‘ஜிம் பாய்ஸ்' தயாராக இருந்தனர்.
கழுத்து நிறைய நகைகளை அணிந்து வந்த ஹரிநாடாரை பார்க்க சில பெண்களும் திரண்டிருந்தனர். இளைஞர்கள் பலர் ஹரிநாடாருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து ஹரிநாடார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா, கருணாநிதி, கமல்ஹாசன்தான் ஹெலிகாப்டரில் வர முடியுமா? எங்களால் முடியாதா? மக்கள் மத்தியில் இந்த மாயையை உடைக்கவே நாங்கள் ஹெலிகாப்டரில் வருகிறோம். அரசியல்வாதிகள் யார்தான் சொத்து சேர்க்கவில்லை. யாருடைய கிண்டலையும் நான் பொருட்படுத்த மாட்டேன். நான் உழைத்து சம்பாதித்து வருமான வரி கட்டி நகைகளை போட்டுள்ளேன்.
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் சரியில்லாததால், எங்கள் சமுதாயத்துக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அதனால்தான் நாங்கள் போட்டியிடுகிறோம். பனங்கள் விற்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.