என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரி, தாராபுரத்தில் பிரதமர் இன்று பிரச்சாரம்

என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரி, தாராபுரத்தில் பிரதமர் இன்று பிரச்சாரம்
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி மற்றும் தாராபுரத்துக்கு வருகிறார். அவரது வருகையையொட்டி போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 10.10 மணிக்கு கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டுக்குச் செல்கிறார். அங்கு பிரச்சாரத்தை முடித்த பின்னர், ஹெலிகாப்டர் மூலம் தாராபுரத்துக்கு மதியம் 12.30 மணிக்கு வருகிறார். கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் அருகே 68 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட் டுள்ளது. கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே 3 ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக வேட்பாளர் எல்.முருகன் உட்பட அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி பிரசாரம் செய்கிறார். இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி செல்கிறார்.

தாராபுரத்தில் பிரச்சாரக் கூட்டம் நடக்கும் பகுதி முழுவதும் தேசிய பாதுகாப்புப் படையான என்.எஸ்.ஜி. கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள் ளது. பிரச்சார இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

புதுச்சேரியில் பிரச்சாரம்

இன்று மாலை 4.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் புதுச் சேரி வருகிறார். இதையொட்டி டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்னியா மேற்பார்வையில் லாஸ்பேட்டை விமான நிலையம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான ஏஎப்டி திடல் ஆகியவை முழுமையாக போலீ ஸார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பட்டுள்ளது. கூட்டத்தில் தேசிய ஜன நாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் ஆதரவு திரட்டுகிறார்.

அதையடுத்து மாலை 5.25 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு விமான நிலையத்திலிருந்து ஹெலி காப்டரில் சென்னை செல்கிறார் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in