Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே தினசரி மின்தேவை 16,000 மெகாவாட்டாக அதிகரிப்பு

கோடை வெயில் முழு அளவில் தொடங்குவதற்கு முன்பே, தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் அளவை தாண்டியுள்ளது.

வீடுகள், கடைகள், வர்த்தகநிறுவனங்கள், தொழிற்சாலைகள் உட்பட தமிழகத்தின் தினசரி மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என குறைந்தும், கோடையில் 16 ஆயிரம் மெகாவாட் என உயர்ந்தும் காணப்படும்.

கடந்த 2019 ஏப்ரல் 3-ம் தேதி இரவு, தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 16,151 மெகாவாட் அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக, தொழிற்சாலைகள் உள்ளிட்டவை செயல்படாததால், கோடையில் வெயில் அதிகம் இருந்தபோதிலும், தினசரிமின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் அளவை எட்டவில்லை.

இந்நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. கோடை வெயிலும் சுட்டெரிப்பதால், ஏசி, ஃபிரிட்ஜ் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் தினசரி மின்தேவை 16,487 மெகாவாட் என்றஅளவை எட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது மின்உற்பத்தி அதிகமாக இருப்பதால், தினசரி மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால், மின்வெட்டு தடுக்கப்பட்டுள்ளது. வரும்மாதங்களில் வெயில் அதிகரிக்கும் என்பதால், தினசரி மின்தேவை 17 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உயரும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x