

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த சின்னசேலம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சின்னசேலம் தொகுதியில் கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆர்.பி.பரமசிவம், இவர் தன் பதவி காலத்தில் ரூ.28.76 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1998-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் தானாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஆர்.பி.பரமசிவத்தின் மனைவி பூங்கொடியும் சேர்க்கப்பட்டார்.
இவ்வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்று வரும்போதே பூங்கொடி 2017-ம்ஆண்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.33 லட்சத்து 04 ஆயிரத்து 168 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 17.6.1991 முதல் 13.5.1996 காலகட்டத்தில் பரமசிவம், அவர் மனைவி, மகன்கள் மயில்வாகனன், பாபு மற்றும் கோவிந்தன் ஆகியோர் பெயரில் வாங்கிய சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.