

பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜனை ஆதரித்து, தயாநிதி மாறன் எம்.பி. நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். நெகமத்தில் அவர் பேசியதாவது:
இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட, பெண் விடுதலை இயக்கத்தை சேர்ந்த சபரிமாலாவின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வைத்துள்ளனர். மடியில் கனம் இல்லாதவர்களுக்கு பயம் எதற்கு? இன்று திமுகவுக்கு ஆதரவாக பேசிவரும் சபரிமாலா மீது கொலை மிரட்டல் வழக்கு தொடுத்துள்ளது அதிமுக அரசு.
பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா இறந்து நாலரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அவரது மரணத்துக்கு காரணம் தெரியவில்லை. கேரளாவுக்கு கரோனா வந்தவுடன் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, ‘இங்கு வந்தால் கரோனாவை ஒரு வாரத்தில் விரட்டி விடுவோம்’ என்று சொன்னார்.
நீட்டை ஒழிப்பேன் என்று தைரியமாக சொல்லும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் படிப்படியாக காய்கறி விலையும் உயரும். சிலிண்டர் இலவசமாக தருகிறேன் என்று அதிமுக ஏமாற்றுகிறது. பாலியல் சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு பொள்ளாச்சி வாக்காளர்கள் தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். இதுகுறித்து பேசியதற்காக என் மீதும் வழக்கு தொடருங்கள். சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.
தொடர்ந்து, கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.