தேர்தல் பிரச்சாரத்தின் போது பழங்குடியின மக்களுடன் நடனமாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அட்டுக்கல் பழங்குடியின கிராமத் தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அட்டுக்கல் பழங்குடியின கிராமத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பழங்குடியின மக்கள் நடனமாடும்படி கேட்டுக் கொண்டதால் அமைச்சரும் அவர்களுடன் இணைந்து நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
பின்னர், அவர் பேசும்போது, “தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடி வருபவன் நான் அல்ல. நான் உங்கள் சகோதரன். கரோனா காலத்தில் களத்தில் இறங்கி பணியாற்றினோம். தேவைப்படுவோருக்கு உணவு, மளிகைப்பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு, மாத்திரைகள், மருந்துகளை அளித்தோம். இடர்பாடுகள் வரும்போது உங்களுக்கு உதவ இருப்பவன் நான். கட்சி பாகுபாடில்லாமல் உதவி வருகிறோம்.
கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினரை 2 ஆண்டுகளாக மீண்டும் மக்கள் பார்க்கவில்லை. கரோனா காலத்தில் ஆறுதல் சொல்லக்கூட எம்.பி. வரவில்லை. இந்த தொகுதியிலும், மாவட்டத்திலும் திமுகவுக்காக உழைத்தவர்கள் நிறையபேர் உள்ளனர்.
அவர்களில் யாரேனும் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பை அளிக்காமல், காங்கேயத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். அவர் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றபிறகு திரும்பி ஊருக்குச் சென்றுவிடுவார். எனவே, திட்டிவிட்டு செல்லட்டும். மக்களோடு எப்போதும் இருக்கப்போவது நாங்கள்தான். எனவே, அனைவரும் ஒன்றுபட்டு எனக்கு வாக்களிக்க வேண்டும்”என்றார்.
