

தமிழகம் முன்னேற மோடி - பழனிசாமி என்ற இரட்டை இன்ஜின் தேவை என பாஜக தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடந்தது. பாஜக தமிழகப் பொறுப்பாளரும், அகில இந்திய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி, வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு வாக்குறுதிகளை வெளியிட்டனர்.
பின்னர், பாஜக தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக, தினமும் பொய்களை கூறி வருகிறார். மு.க.ஸ்டாலின் ஆத்திகரா? நாத்திகரா? என பொதுமக்களிடம் விளக்க வேண்டும்.
இந்து கடவுள்களை மட்டுமே தொடர்ந்து இழிவுபடுத்தும் மு.க.ஸ்டாலின், ‘வேல்’ விவகாரத்தில் நாடகமாடி வருகிறார். நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு தடை ஆகியவை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. தமிழ்நாடு முன்னேற பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி என்ற இரட்டை இன்ஜின் தேவை. கட்டப் பஞ்சாயத்து, மின்வெட்டு, நில அபகரிப்புகள், ரவுடியிசம் போன்றவை வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள்.
முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா இழிவாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். பெண்களை இழிவாகப் பேசுவது தான் திமுகவின் டி.என்.ஏ. கோவை தெற்கு தொகுதியில் மக்களின் ஹீரோ மற்றும் , ‘பிலிம்’ ஹீரோவுக்கு இடையே போட்டி நடக்கிறது. மக்களின் ஹீரோ வேண்டுமென்றால், இம்மண்ணின் மகளான பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
டெல்லியில் இருந்து மறைமுகமாக தமிழகத்தை பாஜக ஆள்கிறது என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு தவறானது. ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாமல் அவர் பேசுகிறார். மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுவது தொடர்பாக, ‘நில ஆர்ஜிதம்’ முடிந்த பின்னர் பணிகள் தொடங்கப்படும். களநிலவரத்துக்கும், கருத்துக் கணிப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் கள நிலவரத்தை நம்புகிறோம். துக்கடா அரசியல்வாதி வானதி சீனிவாசன் என்ற மக்கள் நீதி மய்யத்தின் கருத்து கமல்ஹாசனின் அரசியல் பக்குவமின்மையைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.