

அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பறக்கும் படையினருடன் உளவு பிரிவு போலீஸாரும் இணைந்து கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு அளவில் செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து அரசியல் கட்சியினர் கவர்ந்துவிடக் கூடாது என்பதிலும் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. இதைக் கண்காணிக்க தொகுதிகள்தோறும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பறக்கும் படையினருடன் இணைந்து போலீஸாரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவர சில பகுதிகளில் பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில் ஆலந்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம்கொடுத்தது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பறக்கும் படையினருடன் இணைந்து நுண்ணறிவு பிரிவு (உளவு பிரிவு) போலீஸார் கண்காணிப்பை பலப்படுத்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையங்கள்தோறும் நுண்ணறிவு பிரிவு போலீஸார் உள்ளனர். அவர்களை கண்காணிக்க காவல் மாவட்டம் தோறும் நுண்ணறிவு காவல் ஆய்வாளர்களும் உள்ளனர். தொடர்ந்து உதவி ஆணையர், துணை ஆணையர்கள் கவனத்துக்கும் ரகசிய தகவல் கொண்டு செல்லப்பட்டு காவல் ஆணையர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு அவர்கள் பணிசெய்து வரும் பகுதிகள் நன்கு பழக்கப்பட்டவை. அவர்களுக்கு ரகசிய தகவல்களும் அடிக்கடி வரும். எனவே, பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டால் அது தொடர்பான தகவல்களை சேகரித்து தனக்கு உடனடியாக தெரிவிக்கும்படி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.