

துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியதாக வந்த புகாரில் 2 திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் பி.கே.சேகர்பாபு போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் வினோஜ் பி.செல்வம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் கொண்டித்தோப்பைச் சேர்ந்த கரன்ராஜ் (54) என்பவர் ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சென்னை மாநகர இணைச் செயலாளராக உள்ளேன். தற்போது பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த 28-ம் தேதி இரவு துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு எனது வீட்டில் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.
சென்னை மாநகர இந்து முன்னணி தலைவர் இளங்கோ, வினோஜ் பி.செல்வத்தை சுமார் 10.30 மணிக்கு எனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் என் வீட்டுக்கு வருவதை தெரிந்துகொண்டு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த வினோஜ் பி. செல்வத்தை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினர்.
“நீ இருந்தாதானே எங்க திமுக கட்சியை எதிர்த்து நிற்பாய். உன்னை அடிச்சு காலி பண்ணி விடுவோம்” என்று சொல்லி அடிக்கப் பாய்ந்தனர். அவர்களை வேட்பாளரின் பாதுகாவலர் தடுத்து வெளியே அனுப்பிவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள், கீழே நின்றிருந்த எங்களது காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு என் வீட்டின் தரை தளத்தில் தங்கியிருந்தவர்கள் வீட்டில் இருந்து 2 செல்போன்களை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக இந்த வழக்கு தொடர்பாக கொண்டித்தோப்பைச் சேர்ந்த சங்கர் என்ற ரப்பர் சங்கர் (46), சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் (34) ஆகிய இருவரை நேற்று மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திமுக தொண்டர்கள் என்றும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்களது காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு என் வீட்டின் தரை தளத்தில் தங்கியிருந்தவர்கள் வீட்டில் இருந்து 2 செல்போன்களை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.