Published : 30 Mar 2021 03:15 am

Updated : 30 Mar 2021 07:42 am

 

Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 07:42 AM

சம பலத்தில் பூந்தமல்லி வேட்பாளர்கள்: வெற்றிக் கனியை பறிக்கப் போவது யார்? - திமுக, பாமக கட்சிகளிடையே கடும் போட்டி

poonamallee

சென்னை

பூந்தமல்லி (தனி) தொகுதியில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு வாக்கு வங்கி சமஅளவில் உள்ளதால், தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக, திமுகவேட்பாளர்களுக்கு இடையே வெற்றிக் கனியை யார் பறிப்பார்கள்என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்துக்குள் பூந்தமல்லி தொகுதி இருந்தாலும், சென்னையை ஒட்டி அமைந்துஉள்ளது. கடந்த 2011 தேர்தலின்போது, பொது தொகுதியாக இருந்து, பின்னர் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. 2016 தேர்தலில் அதிமுக சார்பில் ஏழுமலை தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தநிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 அதிமுக எம்எல்ஏ-க்களில் ஏழுமலையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இத்தொகுதியில் தற்போது அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ராஜமன்னாரும், திமுக சார்பில் கிருஷ்ணசாமியும் அமமுக சார்பில் ஏழுமலையும், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிமேகலையும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ரேவதி மணிமேகலையும் போட்டியிடுகின்றனர். திமுக மற்றும்பாமக வேட்பாளருக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது.

பூந்தமல்லியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பூந்தமல்லியில் அரசு கலைக் கல்லூரி, தாமரைப்பாக்கத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். பாரிவாக்கம் சாலை சந்திப்பு, திருமழிசை கூட்டு சாலை ஆகிய பகுதிகளில் மேம்பாலம் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளால் எப்போதும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஆகியவை தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

பூந்தமல்லி தொகுதியில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்கும் வாக்கு வங்கி சமஅளவில் உள்ளது. தனது பதவிக்காலத்தில் செய்த நலத்திட்டப் பணிகளை முன்னிருத்தி திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரித்து வருகிறார்.

அதேசமயம், பாமக வேட்பாளர் ராஜமன்னார் தொகுதிக்கு புதியவர்என்பதால், கூட்டணிக் கட்சியினரின் ஆதரவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் பாமக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள திட்டங்களை செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதேசமயம், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் இத்தொகுதில் கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்ற முனைப்பில், பிரதான கட்சிகளுக்கு நிகராக தொகுதியில் பம்பரமாக சுற்றி வாக்கு சேகரித்து வருகின்றனர். எனினும் அதிமுக, திமுக கட்சிகளுக்கு வாக்கு வங்கி சமஅளவில் உள்ளதால், தேர்தலில் வெற்றிக் கனியை யார் பறிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.



பூந்தமல்லி வேட்பாளர்கள்திமுக பாமககடும் போட்டிPoonamallee

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x