சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் டாஸ்மாக் மது விற்பனை குறைந்துள்ளது: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தகவல்

சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் டாஸ்மாக் மது விற்பனை குறைந்துள்ளது: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தகவல்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம், வேட்பாளர்களின் தேர்தல் செலவினம், மது கடத்தல் கண்காணிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன்மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், காவல் துறை தலைவர்(மதுவிலக்கு அமலாக்கம்) கே.என்.செந்தாமரைக் கண்ணன், மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ், காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர்பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

பின்னர், மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக, மாநகராட்சி மண்டல அலுவலர்களையும் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்தும், பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியிடப்படும் செய்திகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதுதொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. எனினும்,சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களைக் கண்காணிப்பது பெரும் சவாலாக உள்ளது.

மேலும், மது வகைகள் கொண்டுசெல்வதை தடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அணைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி நிறுவி, கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில், முந்தைய காலங்களைக் காட்டிலும், தேர்தல் காலத்தில் மது விற்பனை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை 1,000 லிட்டருக்குமேல் மதுபானங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.

இதுவரை அஞ்சல் வாக்கு தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. அப்போது அவர்கள் அஞ்சல் வாக்குகள் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தேர்தல் பணியில் ஈடுபடும் 6 ஆயிரம் காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in