

முதல்வர் பழனிசாமி ஆறு, ஏரியைத் தூர்வாரினாரோ இல்லையோ கஜானாவை தூர்வாரிவிட்டார். என டிடிவி. தினகரன் பிரச்சாரம் செய்தார்.
உசிலம்பட்டியில் அமமுக வேட்பாளர் இ.மகேந்திரனை ஆதரித்து, அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: வேட்பாளர் மகேந்திரனை எல் லோரும் அழைத்தனர். ஆனால், அவர் அன்பின் பக்கம் உள்ளார். அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அதிமுகவை மீட்டெடுக்க, சின்னம்மா, டிடிவி. தினகரன் பக்கம் திரள வேண்டும் என முடிவெடுத்துள்ளீர்கள்.
தேர்தல் அறிக்கையில் எது நியாயமோ அதை குறிப்பிட்டு இருக்கிறோம். இளைஞர்கள், இளம்பெண்கள் வெளியூர் செல்வதைத் தவிர்க்க, அந்தந்த பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம்.
திமுக ஆட்சிக்கு வருவோம் என மாயையை உருவாக்குகின்றனர். அப்படி எனில் தபால் ஓட்டு போடும் போலீஸுக்கு ஏன் பணம் தருகிறீர்கள். பட்டுவேட்டிக்கு கனவு கண்டபோது, கட்டியிருந்த கோவணத்தை காணவில்லை என வைரமுத்து சொன்னார். அதுபோல திமுக ஆட்சிக்கு வந்தால் கோவணம் கூட மிஞ்சாது.
முதல்வர் பழனிசாமி ஆறு, ஏரியைத் தூர்வாரினாரோ இல்லையோ, கஜானாவை தூர் வாரிவிட்டார். ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துள்ளார். இரு பிரதான கட்சிகளும் பல மணி நேரத்துக்கு தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்கின்றனர். ஆட்சிக்கு வரவேண்டும் என்ப தற்காக ஊடகங்களை பயன் படுத்துகின்றனர். மீத்தேன், ஹைரோட்ரோ கார்பன் திட்டத்தில் திமுக கையெழுத்திட்டது. அலைக்கற்றை ஊழலில் சிக்கி யவர் ஆ.ராசா. தாய்மையை மதிக்கும் தமிழகத்தில் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரிகிறதா? பாவம் பழனிசாமி, தாயாரை நினைத்து அழுகிறார். உங்களை முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றாரே அவரும் ஒரு அம்மாதானே. அவர் காலில் விழுந்து கிடந்தாரே. சாதி பார்த்தா சின்னம்மா பதவி கொடுத்தார். பழனிசாமி பாம்பு, பல்லி அல்ல. பச்சோந்தி. நான் நினைத்து இருந்தால் முதல்வர் பதவியை வாங்கி இருக்க முடியும்.
2001-ல் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியபோதும், நான் நினைத்து இருந்தால் முதல்வராகி இருக்க முடியும். எது வந்தாலும் நேர் வழியில் மக்கள் மூலம் வரட்டும் எனக் காத்திருப்பவன் நான். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து செக்கானூரணி, திரு நகர், பழங்காநத்தம், செல்லூரில் அவர் பிரச்சாரம் செய்தார்.