

தூத்துக்குடி நகரின் தந்தை என்றழைக்கப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் போட்டி போட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடி நகராட்சி தலைவராக 5 முறைபதவி வகித்தவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து.நகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கப்பல் மற்றும் ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்தவர். மேலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து முதல் முறையாக தூத்துக்குடி நகருக்கு குடிநீர் கொண்டு வந்தவர். இதனால் தூத்துக்குடி நகர மக்களால் தந்தை என போற்றப்பட்டவர். இவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தற்போது தமிழக சட்டபேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், தூத்துக்குடி எம்எல்ஏவுமான பெ.கீதாஜீவன், தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், தேமுதிக வேட்பாளர் சந்திரன், சமக வேட்பாளர் என்.சுந்தர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ் ஆகியோர் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதேபோல் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி திமுக நிர்வாகிகளுடன் வந்து மாலை அணிவித்தார். மேலும், பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினர்.