வெள்ள சேதத்தைப் பார்வையிட பாஜக மேலிடக் குழு இன்று சென்னை வருகை

வெள்ள சேதத்தைப் பார்வையிட பாஜக மேலிடக் குழு இன்று சென்னை வருகை
Updated on
1 min read

தமிழக வெள்ள சேதத்தைப் பார்வையிட பாஜக மேலிடக் குழு இன்று சென்னை வருகிறது.

தமிழகத்தில் கடந்த 8-ம் தேதி முதல் பெய்து வரும் கன மழையால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு பாஜக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். அத்துடன் வெள்ள சேதத்தை பார்வையிட்டு அறிக்கை அளிக்க மத்திய தொழில் வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் கோபால் சின்னையா ஷெட்டி (மும்பை வடக்கு) ஆகியோரைக் கொண்ட மூவர் குழுவை அமித்ஷா அமைத்துள்ளார்.

இக்குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘வெள்ள சேதத்தை பார்வையிட நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு சனிக்கிழமை (இன்று) காலை 6 மணிக்கு சென்னை வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கடலூர் சென்று மழை, வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளோம். பின்னர் சென்னையில் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட இருக்கிறோம்’’ என்றார்.

காங்கிரஸ் குழு

வெள்ள சேதத்தை பார்வையிடவும், நிவாரண உதவிகளை வழங்கவும் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் ஆகியோர் கொண்ட குழுவை சோனியா காந்தி அறிவித்துள்ளார். இந்த குழு கடந்த 3 நாள்களாக சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறது. பல இடங்களில் நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in