

திருப்பத்தூர் அமமுக மாவட்டச் செயலாளரின் செயல்பாடுகள் சரியில்லை என குற்றஞ்சாட்டிய அக்கட்சி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால், அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆர்.பாலசுப்பிரமணி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் பக்கம் தாவியதால் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார். பின்னர், அமமுக கட்சியில் இணைந்து மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுகசார்பில் ஜோதி ராமலிங்க ராஜாவும், திமுக சார்பில் வில்வநாதனும், அமமுக சார்பில் பதவியை இழந்த ஆர்.பாலசுப்பிரமணி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலசுப்பிரமணி தனது பதவியை சரிவர பயன்படுத்தாமல், பதவி இழந்ததால் அவரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றிபெற்றார். அமைச்சர் கே.சி.வீரமணியின் செயல்பாட்டால் அதிமுக வசம் இருந்த ஆம்பூர்தொகுதி திமுக பக்கம் திரும்பியது என அதிமுகவினர் குற்றஞ் சாட்டினர்.
இடைத் தேர்தலில் தோல்வியை தழுவியதால் மனமுடைந்த அமமுகமாவட்டச்செயலாளர் ஆர்.பாலசுப் பிரமணி அதன்பிறகு கட்சிப்பணி யில் சரிவர ஆர்வம் காட்ட வில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கூட தலைக்காட்டாமல் ஒதுங்கியேஇருந்தார். இது அக்கட்சி நிர்வாகிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தற்போது, 2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடு கிறது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அமமுக கூட்டணி கட்சிசார்பில் 4 தொகுதிகளில் வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ள அமமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோதும், தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கேற்க வில்லை. ஆனால், மாவட்டச் செயலாளராக உள்ள ஆர்.பாலசுப்பிரமணி பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதால் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அமமுக ஜோலார்பேட்டை ஒன்றிய நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ் திசை நாளிதழிடம்’ கூறும்போது, ‘‘மாவட்டச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி கட்சி வளர்ச்சிக்கு எந்த வேலையும் செய்யவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் கட்சிக்காகவோ, அமமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கோ அவர் வரவில்லை. இதனால், அமமுக கட்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
எனவே, மாவட்டச்செயலாளரின் செயல்பாடு சரியில்லை என கட்சி தலைமைக்கு புகார் கடிதம் கொடுத்துவிட்டு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகிறோம்’’என்றார்.
இதுகுறித்து அமமுக கட்சியின் பொறுப்பாளர்களிடம் விசாரித்தபோது, ‘‘அமமுக கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் எங்கள் வாக்குகளை பிரிக்க முடியாது. இங்கிருந்து சென்றவர்கள் தானாக செல்லவில்லை, பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.
அமமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அக்கட்சியில் இருந்துவிலகி அதிமுகவில் இணைந்து வருவதால், அமமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுவதை எண்ணி அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.