

"சிவசேனாவை உறவாடிக் கெடுத்ததுபோல் அதிமுகவையும் பாஜக உறவாடி சிதைக்கும். ஆகையால், தமிழ்நாட்டையும் தமிழ் கலாச்சாரத்தையும் திராவிட பண்புகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்" என்று தமிமுன் அன்சாரி பேசினார்.
ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தா மோ அன்பரசனை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இன்று மாலை ( 29ம் தேதி) ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார் .
அப்போது அவர் பேசியதாவது:
இதற்கு முன்பு வளர்ச்சித் திட்டங்களை மையப்படுத்தி கட்சிகள் தேர்தல் களத்தை சந்தித்தன. ஆனால், முதல் முறையாக தற்போது தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய சட்டப்பேவைத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத சிந்தனையோடு நம்முடைய கூட்டணி தேர்தல் களத்தை அணுகி இருக்கிறது.
வட இந்திய அரசியல் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் புகுத்த வேண்டும் என்பதற்காக பாஜக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறது. அந்தக் கூட்டணியை இந்தத் தேர்தலில் வேரோடும் வேரோடு மண்ணோடும் சாய்க்கப்பட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு தேர்தல் தளத்தில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
தமிழகமெங்கும் செல்லுமிடமெல்லாம் கட்சி சாராத பொதுமக்களின் முகத்தில் உற்சாகத்தை பார்க்கும்போதே திமுகவுக்கு மக்கள் சாரை சாரையாக வாக்களிக்க முடிவு செய்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.
ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவை ஆடிட்டர் இயக்குகிறார். தமிழ் சமுதாயத்தின் அரசியல் மரபுகளை மாற்றி அமைக்கும் பணியினை ஆடிட்டர் செய்கிறார். அதிமுகவோ பாஜகவின் கொள்கை பங்காளியாக மாறிவிட்டது.
பாஜக முதலில் அதிமுகவை வீழ்த்திவிட்டு பிறகு, திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழகத்தில் நுழைந்துள்ளது.
கழகங்கள் இல்லாத தமிழ்நாடு கவலைகள் இல்லாத நாடு என்ற கோஷத்தை பாஜகவும் அந்தக் கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜாவும் முன்வைக்கின்றனர்.
கூடா நட்பு, கேடாய் முடியும் என்பதை வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் நாம் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பாஜக மகாராஷ்டிராவில் சிவசேனாவை உறவாடிக் கெடுத்தது. அதேபோல் பிஹாரில் நிதிஷ்குமாரையும் கெடுத்தது. அதே நிலை எதிர்காலத்தில் அதிமுகவுக்கும் வரும். அதிமுக, பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக திமுகவுக்கு கூட்டணிக்கு ஆதரவு அளித்திருக்கிறோம்.
புதுச்சேரிக்கு ஏற்பட்ட நிலையை தமிழகத்திலும் ஏற்படுத்த பாஜக துடிக்கிறது. அதிமுகவுக்கு போடும் ஓட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழ்நாட்டையும், தமிழர்கள் உணர்வுகளையும், திராவிட இயக்கத்தையும் பாதுகாக்க ,வேண்டும் என்ற லட்சியத்தோடு மனிதநேய ஜனநாயக கட்சி அதிமுக பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே இலக்கோடு திமுக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளது.
தமிழகத்தில் பல கூட்டணிகள் தேர்தல் களத்தில் உள்ளன. ஆனால், அதிமுக பாஜகவை வீழ்த்தக் கூடிய ஒரே அணி திமுக அணி மட்டுமே.
வட இந்திய அரசியல் கலாச்சாரத்தை தமிழகத்திற்கு புகுத்தக் கூடிய தீய சக்திகளை வீழ்த்தி வலுவான மாற்று சரியான மாற்று பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கண்ட திமுக தலைமையிலான அணி மட்டுமே.
எனவே உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.