விருத்தாச்சலம் எங்களுக்கு வெற்றி வீடு: விஜய பிரபாகரன்

விருத்தாச்சலம் எங்களுக்கு வெற்றி வீடு: விஜய பிரபாகரன்
Updated on
1 min read

ஒவ்வொருவருக்கும் பிறந்த வீடு, புகுந்த வீடு என இருக்கும். எங்களைப் பொறுத்தவரை விருத்தாச்சலம் எங்களுக்கு வெற்றி வீடு என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய பிரபாகரன் பேசினார்.

விருத்தாச்சலத்தில் அமமுக - தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை ஆதரித்து அவரது மகன் விஜய பிரபாகரன் வாக்குச் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''இது எனக்கு முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். கன்னியாகுமரியில் தொடங்கி எனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறேன். விருத்தாச்சலம் வரும்போது எனக்கு சொந்த ஊருக்கு வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஒவ்வொருவருக்கும் பிறந்த வீடு, புகுந்த வீடு என இருக்கும். எங்களைப் பொறுத்தவரை விருத்தாச்சலம் வெற்றி வீடு. இங்குள்ள ஒவ்வொருவரையும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கிறேன்.

முதலில் என் தந்தைக்கு இந்தத் தொகுதியில் வாய்ப்பளித்து அவருக்கு அரசியல் அங்கீகாரம் அளித்தீர்கள். எனது தந்தை உடல்நலக் குறைவால் இருக்கும் இச்சூழலில் எனது தாயார் இங்கு போட்டியிடுகிறார். எனது தந்தைக்கு அளித்த ஆதரவை எனது தாய்க்கும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனது தந்தை வெற்றி பெற்று இந்தத் தொகுதியில் நிலவிய குடிநீர் பிரச்சினையை எப்படித் தீர்த்தாரோ, அதேபோன்று எனது தாயும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால், நலத் திட்டங்களைத் தொடர்ந்து செய்வார்.

விருத்தாச்சலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க சட்டப்பேரவையில் பிரேமலதா குரல் கொடுப்பார். உங்களுக்காக உழைக்க நான் தயாராக உள்ளேன். என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவர் விஜயகாந்த். அவர் இப்பகுதி மக்களைத் தங்கத் தட்டில் வைத்துத் தாலாட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கரோனா காலத்தில் மக்களுக்கு உதவ முன்வராதவர்கள் இன்று இலவசங்களை அறிவித்து உங்களை நாடி வருகிறார்கள். அவர்களை நம்பாதீர்கள். விருத்தாச்சலத்தில் முரசுதான் கெத்து என்பது நிரூபிக்கின்ற வகையில் முரசில் ஒரு குத்து குத்துங்கள்''.

இவ்வாறு விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in