

கரூரில் தேர்தலில் வாக்களிக்கக் கோரி வெற்றிலை தாம்பூலத்துடன் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வரும் ஏப்.6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி நேர்மையுடன் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்கள் நேர்மையுடன் தங்கள் வாக்குகளைச் செலுத்த வலியுறுத்தி, கரூர் தொகுதி தேர்தல் அலுவலரும், கரூர் கோட்டாட்சியருமான எஸ்.என்.பாலசுப்பிரமணியன், கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள கடைகளுக்கு இசை வாத்தியங்கள் முழங்க இன்று (மார்ச் 29) நேரில் சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை அழைத்து தேங்காய், வாழைப்பழம் கூடிய தட்டில் வெற்றிலை, தாம்பூலத்துடன் அழைப்பிதழ் வைத்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து ஏப். 6-ம் தேதி வாக்களிக்க வேண்டும் என்று கரூர் கோட்டாட்சியர் கூறினார்.
வெற்றிலை, தாம்பூலத்துடன் அழைப்பிதழ் வழங்கி வாக்களிக்க வலியுறுத்தியது வியாபாரிகளைக் கவர்ந்துள்ளது.