

சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தியதாக 27 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சிறப்பு டிஜிபியாக பணிபுரிந்த உயரதிகாரி (தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ளார்) மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அந்த உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்ச் 3-ம் தேதி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 27 பேர் மீது தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சசிகலா, செல்வராஜ், ராஜேஸ்வரி உட்பட 27 பேர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது ஏற்புடையது அல்ல.
எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். அந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஹேமலதா விசாரித்து, மனுதாரர்கள் 27 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.