

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகிறார். இதையொட்டி, ஆயிரம் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர் வருகையையொட்டி புதுச்சேரியில் பறந்தபடி படம் பிடிக்கும் ட்ரோன் கேமரா பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி நாளை (மார்ச் 30) மாலை 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடக்கும் ஏ.எப்.டி. திடலுக்கு வருகிறார். சுமார் ஒரு மணி நேரம் பிரச்சாரக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் ஆகியோருடன் பங்கேற்று பேசுகிறார்.
அதையடுத்து, மாலை 5.25 மணிக்கு திடலில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை சென்றடைகிறார்.
இதையொட்டி, நகரில் ஆயிரம் போலீஸார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நகரில் பிரதமர் வாகனம் செல்லும் சாலைகளில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. மாதிரி ஒத்திகையும் இன்று (மார்ச் 29) நடைபெற்றது.
இச்சூழலில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள உத்தரவில், "பிரதமர் வருகையையொட்டி அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்றும், நாளையும் பறக்கும் பறக்கும் சாதனங்கள் பயன்படுத்த அனுமதியில்லை. பறக்கும் கேமரா பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். நகர் முழுக்க உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.