

புதுச்சேரிக்குத் தாமதமாக வந்த கமல், பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல் இடத்திலேயே மைக் வேலை செய்யாததால் அதிருப்தியடைந்து சைகையால் சின்னத்தைக் காட்டி வாக்குச் சேகரித்தார்.
புதுச்சேரி, காரைக்காலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று (மார்ச் 29) மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரிக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. விமான நிலையம் வெளியே மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களை அறிமுகப்படுத்தி, செய்தியாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், மாலை 3.35 மணியளவில்தான் கமல்ஹாசன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார். அவர் உடனடியாக அவரது பிரச்சார வாகனத்தில் ஏறி பிரச்சாரத்துக்குப் புறப்பட்டார். கட்சி நிர்வாகிகளும் ஏதும் அவரிடம் சொல்லவில்லை, மாநில நிர்வாகிகளைக் கூட தனது பிரச்சார வாகனத்தில் அவர் ஏற்றவில்லை. அப்போது, செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "நேரமில்லை. அதனால் பேட்டியில்லை" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, நிர்வாகிகள், வேட்பாளர்கள் தங்கள் வாகனத்துடன் அவரைப் பின்தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, ராஜ்பவன் தொகுதியில் செஞ்சி சாலை தாண்டி பிரஸ் கிளப் அருகே பேசுவதற்காக பிரச்சார வாகனத்தை நிறுத்தினார். அருகே மற்றொரு மினி டெம்போவில் வேட்பாளர்கள் இருவர் உடன் நின்றனர்.
அதையடுத்து, கமல்ஹாசன் பேசத் தொடங்கினார். ஆனால், மைக் வேலை செய்யவில்லை. மைக் இணைப்பு சரியில்லாததால் அவர் பேசியது முழுமையாக இல்லாததால் அங்கிருந்தோர் கேட்கவில்லை என்று கத்தினர். சுமார் 15 நிமிடம் வரை முயன்று பார்த்தார். மைக் இருந்த வாகனத்தில் இருந்தோரை இறங்குமாறு கமல் கூறினார். அவர்களும் இறங்கினர். ஆனால், மைக் வேலை செய்யாததால் சைகையில் சின்னத்தைக் காட்டி வாக்குச் சேகரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். மேலும், பல இடங்களில் கமல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.