

சுதந்திர தினப் பெருவிழா கொண்டாடும் வேளையில் வீட்டுக்கு ஒரு மரம் நட்டு பசுமை புதுச்சேரி திட்டத்துக்கு உதவ வேண்டுமென பொதுமக்களுக்கு ஆளுநர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நமது நாட்டின் 75-வது சுதந்திர தினப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘‘பசுமை மிகு புதுச்சேரி’’யை உருவாக்குவது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெற்றது.
ராஜ்நிவாஸில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி. மகேஸ்வரி, தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் தொடர்புத் துறைகளான கிராம அபிவிருத்தி, விவசாயம், உள்ளாட்சித் துறை, வனத்துறை, கல்வித்துறை, நலத்துறை மற்றும் மீன் வளத்துறையின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக இலக்கு நிர்ணயித்து "பசுமை புதுச்சேரி"யை உருவாக்கச் செயல் திட்டத்தினைப் பற்றியும், அதைச் செயல்படுத்தும் விதம் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அமைந்துள்ள 109 பூங்காக்களிலும் மரக்கன்றுகள், பயன் தரத்தக்க மரங்கள் நடுவது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் பயன்தரும் பழவகை மரக்கன்றுகள் நடுதல் குறித்தும், கல்வித்துறை மூலம் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் மரக்கன்றுகள் தடுவதை ஊக்குவிப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பொது இடங்களில் அழகுமிகு வண்ணத் தோட்டங்கள் அமைப்பது பற்றியும் முடிவு செய்யப்பட்டது.
சுதந்திர தினப் பெருவிழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் வீட்டுக்கு ஒரு மரம் நட்டு "பசுமை புதுச்சேரி" திட்டத்துக்கு உதவ வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.