Last Updated : 29 Mar, 2021 04:23 PM

 

Published : 29 Mar 2021 04:23 PM
Last Updated : 29 Mar 2021 04:23 PM

1996-ல் திமுக- தமாகா வெற்றி பெற நான்தான் காரணம்: சரத்குமார் பேச்சு

1996-ல் திமுக, தமாகா கூட்டணி வெற்றிக்கு நான்தான் காரணம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஜோசப்பை ஆதரித்து மதகுபட்டி, ஒக்கூர், சிவகங்கை காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''கமல் தன் உழைப்பின் மூலம் வெற்றி பெற்றவர். அவர் ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்தில் இருந்தே மக்களுக்குச் சேவை செய்து வருகிறார். மேலும் மக்கள் சேவை செய்ய அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதற்காகக் கட்சி தொடங்கி, தேர்தலில் நிற்கிறார்.

1996-ம் ஆண்டு திமுக- தமாகா கூட்டணியை வெற்றி பெறச் செய்ததற்கு முதல் காரணம் நான்தான். அப்போது தொடர்ந்து 40 நாட்கள் பிரச்சாரம் செய்து அவர்களை வெற்றி பெறச் செய்தேன். தற்போது புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டி, ஒத்த கருத்துடையவர்களால் எங்கள் கூட்டணி உருவானது. நாங்கள் பல நல்ல திட்டங்களை வைத்துள்ளோம்.

இப்போது மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. பொருளாதாரம் உயரவில்லை. மக்களுக்குப் பணம் கொடுத்தால் போதும், வாக்கு அளித்துவிடுவார்கள் என எண்ணுகின்றனர்.

காலில் விழுந்து, கெஞ்சிக் கேட்கிறேன். வாக்குக்குக் கொடுக்கும் பணத்தைத் தூக்கி எறியுங்கள். உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியும், துணிவும் வேறு எதிலும் கிடைக்காது. இலவசம் தூண்டுதலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் எதற்கெடுத்தாலும் இலவசம் என்று அறிவிக்கின்றனர்.

முதல்வர் கனவு காணும் ஸ்டாலின் மகன் காவல்துறையினரை எச்சரிக்கிறார். அவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்பதைச் சிந்தியுங்கள். எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்''.

இவ்வாறு சரத்குமார் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x