

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 16 பேரும் துணைநிலை ஆளுநர் தமிழிசையை இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நாகையைச் சேர்ந்த இருவர் ஆகியோருடன் மொத்தம் 14 பேர், கடந்த 23-ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, 14 பேரையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். பிடிபட்ட தமிழக மீனவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், காரைக்கால் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இதுதொடர்பாகப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மூலம் இலங்கை அரசிடம் பேசியுள்ளதாகவும் விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்திருந்தார். புதுச்சேரி ஆளுநர் தமிழிசையும் முயற்சிகள் எடுத்தார்.
மீனவர்கள் நாடு திரும்பும் வரை தொடர்ந்து தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க தனது ஆலோசகர்களுக்கும் அவர் அறிவுறுத்தினார். இந்நிலையில் நிபந்தனைகளுடன் 14 மீனவர்களையும் யாழ்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து 14 மீனவர்களும் 27-ம் தேதி இரவு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில் இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 16 பேரும், துணைநிலை ஆளுநர் தமிழிசையை இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தங்களை மீட்க வெளியுறவுத் துறையைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். ஆளுநர் தமிழிசையின் தொடர் முயற்சி, இக்கட்டான சூழலில் தங்களுக்கு ஆறுதலாக இருந்ததாக மீனவர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "மீனவர்கள் கடலுக்குள் செல்லும் அனைத்து நேரங்களிலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குடும்பத்தையும், முக்கியமாகக் குழந்தைகளையும் சரியான முறையில் கவனித்துக் கொள்வது அவசியம்" என்று அறிவுறுத்தினார்.