

தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன் முககவசமும் அணியுங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.
புதுவையில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
”கரோனா மறுபடியும் நம்மை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதில் நாம் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை முதலில் நாம் உணர வேண்டும். முகக்கவசம் அணிவது பாதுகாப்பை தருகிறது என்று தெரிந்தாலும் கூட 50 சதவீதம் பேர் தான் அதனை கடைபிடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது 406 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே, முகக்கவசம் ஒரு உயிர்க்கவசம், உடல் கவசம். மூக்கு, வாய் மட்டும் மூடுவதன் மூலம் கரோனா நம்முடைய உடலுக்கு செல்ல முடியாத தன்மையை ஏற்படுத்துகிறது. எனவே, கூட்டமாக உள்ள இடத்தில் எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும். ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டால் அதனால் 406 பேருக்கு நோய் தொற்றுகிறது.
அதே நேரத்தில், 50 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்தால் அந்த எண்ணிக்கை 15 ஆக குறைகிறது. 75 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்தால் அந்த எண்ணிக்கை 2 அல்லது 3 ஆக குறைகிறது. அப்படி என்றால் இந்த முகக்கவசம் நம்மை எந்த அளவு பாதுகாக்கிறது என்று. எனவே, தடுப்பூசி போட வேண்டும். முகக்கவசமும் அணிய வேண்டும். நீங்கள் (மக்கள்) எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.