

முதல்வர் குறித்து சர்ச்சையாகப் பேசி ஆ.ராசா வருத்தம் தெரிவித்த நிலையில், ஆ.ராசாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத் துணைத் தலைவர் மகேந்திரன் அறிக்கை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதை மகேந்திரன் கண்டித்து மறுத்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ.ராசா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். பெண்கள் போராட்டம் நடத்தினர்.
ஆ.ராசா தன்னிலை விளக்கம் கொடுத்தார். திமுக தலைவர் கண்ணியக் குறைவாக யாரும் பேசக்கூடாது என அறிவுறுத்தினார். நேற்று மாலை சென்னை, திருவொற்றியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார்.
''ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? இவர்கள் எல்லாம் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுடைய நிலைமை என்ன ஆவது? தாய்மார்களின் நிலைமை என்ன ஆவது? சிந்தித்துப் பாருங்கள்'' என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
இந்நிலையில் இன்று காலை ஆ.ராசா திடீரென செய்தியாளர்களைச் சந்தித்து தனது செயலுக்கு முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார். இது திமுக - அதிமுக பக்கம் நடந்த விவகாரம் என்றாலும், சம்பந்தமே இல்லாமல் மக்கள் நீதி மய்யத்தை இந்த விவகாரத்தில் சிலர் இழுத்துவிட்டனர்.
அதிலும் கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல், துணைத் தலைவர் மகேந்திரன் ஆகிய இருவரும் போட்டியிடும் நிலையில், ஆ.ராசாவை ஆதரித்து மகேந்திரன் பெயரில் மக்கள் நீதி மய்யம் லெட்டர் பேடில் ஒரு அறிக்கை சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப்களில் உலா வருகிறது.
அந்த அறிக்கையில், “சில நாட்களுக்கு முன் திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்து கருத்து கூறியது கருத்துச் சுதந்திரத்துக்கு உட்பட்டது.
ஆகவே, கருத்துச் சுதந்திரத்தை எதிர்க்கும் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்டித்து திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் என்றும் துணை நிற்கும் என நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயம் ஆ.ராசாவைக் கண்டித்து தேர்தல் நேரத்தில் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் சமுதாயச் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வைரலான நிலையில், மக்கள் நீதி மய்யத் துணைத் தலைவர் மகேந்திரன் இதை கடுமையாக மறுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு:
“மக்கள் நீதி மய்யம் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகளால் ஊடகங்களில் பரவும் இந்தச் சுற்றறிக்கை தவறானது! அருவருக்கத்தக்க இச்செயலை செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்”.
இவ்வாறு மகேந்திரன் பதிவிட்டுள்ளார்.