Published : 29 Mar 2021 01:55 PM
Last Updated : 29 Mar 2021 01:55 PM

பாட்மிண்டன் விளையாடி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் வாக்குச் சேகரிப்பு

துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் பாட்மிண்டன் விளையாடி, தொகுதி இளைஞர்களிடம் வாக்குச் சேகரித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் சென்னை, துறைமுகம் தொகுதியில் பாஜகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ்.பி.செல்வம் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு முன்னதாகவே, வினோஜ் செல்வம் துறைமுகம் தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வினோஜ் செல்வம், கொத்தவால் சாவடி பகுதியில் இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு பாட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடியவாறே வினோஜ் செல்வம் வாக்குச் சேகரித்தார். விளையாடிக் கொண்டே மத்திய, மாநில அரசுகளின் திட்டம் குறித்து விளக்கிக் கூறினார். தன்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று வினோஜ் செல்வம் உறுதி கூறினார். தினந்தோறும் பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு ஈடாக விளையாடிய அவருக்கு, அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி, ஆரவாரம் எழுப்பினர்.

முன்னதாக நேற்று, சென்னை கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் துறைமுகம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ''குடிசைப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் குடிசைப் பகுதி மக்களுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே வீடு கட்டித் தரப்படும். யானைக்கவுனி மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க முயற்சி எடுக்கப்படும். பர்மா பஜார், பூக்கடை, சவுக்கார்பேட்டை போன்ற பகுதிகளில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.

ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 750 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும், அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி மாணவர்களுக்கு நல்ல கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x