Published : 29 Mar 2021 01:25 PM
Last Updated : 29 Mar 2021 01:25 PM

அதிமுக ஆட்சியில் சிங்கப்பூர் மாதிரி அருமையாக மாறிய தி.நகர்: பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

திமுக வந்து விட்டால் அவ்வளவுதான் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29), சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தியாகராயநகர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:

"அதிமுக இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும் என்ற அவதூறு பிரச்சாரத்தை ஸ்டாலின் செய்து வருகிறார். ஸ்டாலின் போகும் இடமெல்லாம் என்னைப் பற்றித்தான் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி பல்லாண்டு வாழ வேண்டும் என்று கூறி வருகிறார். இவர் சொல்லியா நான் வாழ வேண்டும், இறைவன் அருளால் நான் வாழ்கின்றேன். நாங்கள் தெய்வ பக்தி உடையவர்கள். உங்களைப் போல, கோயிலுக்குச் சென்றால் விபூதியை அழிப்பவர்கள் அல்ல. தேவரின் நினைவிடத்திற்குச் சென்றபோது, அங்கு வழங்கிய திருநீறைக் கீழே கொட்டியவர் ஸ்டாலின். ஆனால், நாங்கள் உண்மையான தெய்வ பக்தி கொண்டவர்கள். தெய்வ பக்தி இருப்பவர்களிடம் இரக்கம் கிடைக்கும், பண்பு இருக்கும், உயர்வு கிடைக்கும் இவையெல்லாம் இருக்கும் இடத்தில்தான் பக்தியும் இருக்கும்.

திமுகவினர் மக்களுக்காக அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்று கூறிவருகின்றனர். அவர்கள் தி.நகருக்கு வந்து பார்க்கட்டும். சிங்கப்பூர் மாதிரி அருமையாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் பாண்டிபஜார் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் ரயில் நிலையம் வரை ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் ரங்கராஜபுரம் ரயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டது. கோடம்பாக்கம் பாலம் பழுதுபார்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. ரூ.11 கோடியில் 121 தார்சாலைப் பணிகள் இந்தப் பகுதியில் செய்யப்பட்டுள்ளன. 127 சாலைப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரூ.6 கோடி செலவில் 34 சிமெண்ட் கான்கிரீட் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, 15 பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.2.30 கோடி செலவில் 26 பூங்காக்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 16 பணிகள் நிறைவுபெற்றுள்ளன. அதேபோல, காமராஜ் காலனியில் நவீன உடற்பயிற்சிக் கூடம் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.19 கோடி செலவில் 9 மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலே சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் 200 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 192 அம்மா மினி கிளினிக்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் 6 அம்மா மினி கிளினிக்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே ஒரே சமயத்தில் 2,000 அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்த ஒரே மாநிலம் தமிழகம்தான்.

சென்னை மாநகரத்தில் இருக்கின்ற அனைத்து மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக உயர்தர மருத்துவக் கருவிகளை வழங்கி இருக்கிறோம். இந்தியாவிலேயே கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை எடுத்தோம். அந்தப் பரிசோதனைக்கு செலவு அதிகம். எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம், பணம் முக்கியமில்லை என்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை எடுத்தோம். அதில், நோய் அறிகுறி தென்பட்டால் தமிழக அரசு உரிய சிகிச்சை அளித்து அவர்களை குணமடைய செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.

பிரதமருடன் காணொலிக் காட்சி மூலமாக முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றும்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்றுநோய் மிகச் சிறப்பாக கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதனையே அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பாராட்டினார்.

சென்னை மாநகர மக்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சாலைகளை புதுப்பித்திருக்கிறோம். அடையாறு, கூவம் ஆற்றைச் சீரமைத்திருக்கிறோம். மழைக் காலங்களில் வடிகால் வசதி செய்து எங்கும் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு வடிகால் வசதியைச் சிறப்பாகச் செய்திருக்கிறது. சென்னை மாநகரத்தில் மட்டும் மழைநீர் கால்வாய் 954 கிலோ மீட்டர் நீளச் சாலைகளுக்கு கால்வாய்கள் அமைத்து, தொடர் மழை மற்றும் புயல் வந்தாலும் எந்த வீதியிலும் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றக் கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்த அரசு அதிமுக அரசு.

திமுக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை. ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தார். சென்னை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் மேயரின் வேலை. ஐந்து ஆண்டு காலம் எந்தப் பணியையும் செய்யவில்லை.

ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தார். அப்போதாவது சென்னை மாநகர மக்களின் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்திருக்கலாம். அப்போதும் ஒன்றும் செய்யவில்லை. இப்படி 10 ஆண்டு காலம் ஸ்டாலின் பதவியில் இருந்தாலும் சென்னை மாநகர மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவர் தனது குடும்பத்தைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தார், நாட்டு மக்களைப் பார்க்கவில்லை. அதிமுக ஆட்சியில்தான் மழைநீர் வடிகால் ஏற்படுத்தப்பட்டு எங்கும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் புயல் வந்தாலும் சென்னை மாநகர மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக அரசு பூமிக்கு அடியில் மின்பாதை அமைத்து கேபிள் மூலம் மின்சாரம் கொடுக்கின்றோம். மழைக் காலத்திலும் தடையில்லா மின்சாரம் கொடுக்கின்றோம். அதனால் புதிய புதிய தொழிற்சாலைகள் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றன.

2019-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் என் தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், தொழில் முதலீட்டாளர்கள் ரூபாய் 3 லட்சத்து 500 கோடி மதிப்பிலான தொழில் தொடங்க 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது நிறைவேறும்போது நேரடியாக 5.50 லட்சம் நபர்களுக்கும் மறைமுகமாக 5 லட்சம் நபர்களுக்கும் என மொத்தமாக 10.50 லட்சம் நபர்களுக்கு ஒரே நேரத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சென்னை மாநகர மக்கள் வேலைவாய்ப்பை நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது அரசின் கடமை.

சட்டம்- ஒழுங்கை பேணிக் பாதுகாப்பதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. சென்னை மாநகரம்தான் பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மாநகரம் என்று மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. ஆனால், திமுக வந்துவிட்டால், அவ்வளவுதான். தப்பித் தவறியும் வராது. அதற்கு இடம் கொடுக்காதீர்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, கூலிப்படை வந்துவிடும். உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது. உங்கள் இடத்தை அவர்கள் பட்டா போட்டுக் கொள்வார்கள். திமுகவினர் அப்பாவி மக்களிடமிருந்து அபகரித்த நிலத்தை மீட்பதற்காக ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்புப் பிரிவினைக் கொண்டு வந்து 14.5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டு உரியவர்களிடம் சேர்த்தார்.

தமிழ்நாடு முழுவதும் 2.5 லட்சம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதனால், உடனடியாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதால் குற்றங்கள் பெருமளவில் குறைந்து, சாதி, மதச் சண்டைகள் இல்லாமல் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. எனவே, வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.

திமுகவினர் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாதபோது, செல்போன் வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் கடைக்காரரை அடிக்கின்றனர். அதுபோல், பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டு பணம் கொடுக்காமல் அந்தக் கடைக்காரரை அடிக்கின்றனர். மறுநாள் ஸ்டாலின் பிரியாணி கடைக்குச் சென்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். இவ்வாறு கட்டப் பஞ்சாயத்து செய்யும் தலைவர் தமிழ்நாட்டுக்கு தேவையா? உங்களிடம் நாட்டைக் கொடுத்தால் நாடு என்ன பாடுபடும்?

சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்திலும் நீர் நிரம்பியுள்ளது. எங்கள் ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதற்கு இயற்கையே சாட்சி. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அணைகளிலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் நீர் நிரம்பியுள்ளது. ஆகவே, இறைவன், இயற்கை மற்றும் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x