Last Updated : 29 Mar, 2021 01:00 PM

 

Published : 29 Mar 2021 01:00 PM
Last Updated : 29 Mar 2021 01:00 PM

திமுக, அதிமுக என வரலாற்றுப் பிழையை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள்: செஞ்சியில் சீமான் பேச்சு

சீமான்: கோப்புப்படம்

விழுப்புரம்

திமுக, அதிமுக என வரலாற்றுப் பிழையை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆபூ.சுகுமாரை ஆதரித்து நேற்று (மார்ச் 28) சீமான் பேசியதாவது:

''உலகத்தில் தலைசிறந்த கல்வியில் முதல் இடத்தில் தென்கொரியா, இரண்டாம் இடத்தில் ஜப்பான், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர், நான்காவது இடத்தில் ஹாங்காங், 5-ம் இடத்தில் பின்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த 5 நாடுகளை முந்திக்கொண்டு தமிழ்நாட்டில் தரமான கல்வியைக் கொண்டுவருவேன். பிள்ளைகள் வீட்டின் செல்வங்கள் அல்ல, நாட்டின் செல்வங்கள். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாகக் கற்பிக்கப்படும்.

ஏன் என்றால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவுதான் முக்கியம். அந்த அறிவு விற்பனைக்கு அல்ல. உயிர் காக்கும் மருத்துவம், தரம் உயர்த்தி ஒரு ரூபாயில் இருந்து ஒரு கோடி வரை இலவசமாக அளிக்கப்படும். முதல் குடிமகனுக்குக் கிடைக்கும் சலுகை, கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றுவேன். இதுதான் ஜனநாயகம்.

அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும். மீறித் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் அரசு சம்பளத்தில் அரசு சரிபாதியாக எடுத்துக்கொள்ளும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை. நான் ஓட்டுக்காக நிற்கவில்லை, நாட்டுக்காக நிற்கிறேன்.

இந்த வரலாற்று வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. ஆனால், மாற்றம் வரவில்லை. வேறு வழியில்லை என்று சொல்லாதீர்கள். திமுக, அதிமுகவிற்கு மாற்றாக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். எங்கள் ஆட்சியில் வாழ்ந்து பாருங்கள். தமிழகம் சொர்க்கமாகத் திகழும்.

செஞ்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஆபூ.சுகுமாருரை வெற்றி பெறச் செய்யுங்கள். அவர் கட்சியின் வேட்பாளர் அல்ல, மக்களின் வேட்பாளர். இது தேர்தல் வெற்றி அல்ல, வரலாற்று வெற்றி. எந்த அரசியல் பின்புலமும் இல்லை. எந்தப் பொருளாதார வழியும் இல்லை. பணம் இல்லை. வாக்குக்குக் காசு கொடுக்கவில்லை. அவர்கள் கோடிகளைக் கொட்டினார்கள். நாங்கள் ஆகப்பெரும் கொள்கைகளைக் கொட்டுகிறோம்.

நல்ல கருத்துகளை விதைத்துவிட்டால் தவறான அரசாங்கம் உருவாகாது. கை நிறைய விதைகளை விதைத்துக் கொண்டிருக்கிறேன். 10 ஆண்டு காலம் விதைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று பல லட்சம் இளைஞர்களை உருவாக்கியிருக்கிறார்கள். திமுக, அதிமுக என மறுபடியும் வரலாற்றுப் பிழையைச் செய்யாதீர்கள்".

இவ்வாறு சீமான் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x