திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 வேட்பாளர்களில் 10 பெண்கள் மட்டுமே போட்டி: வாய்ப்பு வழங்காத முன்னணி அரசியல் கட்சிகள்  

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பெண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அரசியல் மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் களத்தில் தொடர்ந்து பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். பெண்களை அங்கீகரிக்க முன்னணி அரசியல் கட்சிகள் உட்பட பலரும் முன்வரவில்லை. மேடைப்பேச்சுடன், தங்களது கர்ஜனையை நிறுத்திக் கொள்கின்றனர். அதற்குச் செயல் வடிவம் கொடுக்க மறுக்கின்றனர். ஆண்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 122 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 10 பேர் மட்டுமே பெண்கள். 8 சதவீதப் பெண்கள் மட்டுமே களம் காண்கின்றனர். இவர்களில் 6 பேர் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 4 பேர் சுயேச்சைகள். முன்னணி அரசியல் கட்சியினர் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அக்கட்சியினர் ஆண்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்க முனைப்பு காட்டியுள்ளனர்.

திமுக போட்டியிடும் 8 தொகுதிகளிலும் ஆண் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது. இதேபோல், 8 தொகுதியில் களம் காணும் பகுஜன் சமாஜ் கட்சியும் பெண்கள் போட்டியிட அனுமதிக்கவில்லை. 5 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, 2 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, ஒரு தொகுதியில் போட்டியிடும் பாஜக, 5 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக, 3 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக, 2 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள், பெண்களுக்கு வாய்ப்பு வழங்க மறுத்துள்ளன.

அதே நேரத்தில், தேர்தல் களத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் களம் காணும் அக்கட்சி, 4 தொகுதிகளில் பெண்களைப் போட்டியிட அனுமதித்துள்ளது. 6 தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம், ஒரு தொகுதியில் போட்டியிட பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. மேலும், தேசிய சிறுபான்மையினர் மக்கள் கழகம் சார்பில் ஒரு பெண் போட்டியிடுகிறார்.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு பெண் கூட போட்டியிடவில்லை. கீழ்பென்னாத்தூர், போளூர், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா 2 பெண்களும், செங்கம், கலசப்பாக்கம், ஆரணி, வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா ஒரு பெண்ணும் போட்டியிடுகின்றனர்.

எதிர்காலத்தில் தேர்தல் அரசியலில் பெண்களுக்கு அனைத்துக் கட்சிகளும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in