Published : 29 Mar 2021 12:24 PM
Last Updated : 29 Mar 2021 12:24 PM

முதல்வரிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்: ஆ.ராசா

சென்னை

முதல்வரின் அம்மாவைப் பற்றிப் பேசியது தவறாகக் கொண்டு செல்லப்படுவதால் வருத்தம் தெரிவிக்கிறேன். முதல்வர் கண்கலங்கியதைப் பார்த்தேன். அதற்காக முதல்வரிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ.ராசா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சை பாமக நிறுவனர் ராமதாஸும் கண்டித்தார். ஆ.ராசா, லியோனி இருவரது பேச்சும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், திமுக கண்ணியக் குறைவாகப் பேசுவதை அனுமதிக்காது என ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை, திருவொற்றியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். சிறிது நேரம் பேச முடியாமல் தலை கவிழ்ந்து நின்ற அவர், பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார்.

''ஒரு சாதாரண மனிதன் முதல்வராக இருந்தால் என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?

இவர்கள் எல்லாம் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுடைய நிலைமை என்ன ஆவது? தாய்மார்களின் நிலைமை என்ன ஆவது? சிந்தித்துப் பாருங்கள். என் தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி, இரவு பகலாகப் பாடுபட்டவர். அவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி இழிவாக, தரக்குறைவாக எப்படியெல்லாம் பேசினார். ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை.

ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் தாய் என்பவர்தான் உயர்ந்த ஸ்தானம். யார் தாயை இழிவாகப் பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாகத் தகுந்த தண்டனை வழங்குவான்'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.

முதல்வரின் இந்தப் பேச்சு வைரலானது. தமிழகத்தின் பல இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தினர். ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்தனர். ஆ.ராசாவின் பேச்சு கொங்கு மண்டலத்தில் தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று காலை ஆ.ராசா திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். தனது செயலுக்கு முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆ.ராசா அளித்த பேட்டி:

''2 நாட்களுக்கு முன்னர் பெரம்பலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் குறித்து நான் பேசியதாக எழுந்த பிரச்சினை குறித்து தன்னிலை விளக்கம் அளித்தேன். என்றாலும் அதுகுறித்து விவாதம் தொடர்ந்ததால் கூடலூர் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி குறித்தோ அவரது அன்னை குறித்தோ நான் தவறாகப் பேசவில்லை. நானும் ஒரு தாயின் 8-வது குழந்தை என்கிற முறையில் அப்படித் தவறாகப் பேசவில்லை என்று தெரிவித்தேன்.

ஆனாலும், முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டுக் கண்கலங்கினார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சு குறித்து மனதின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன்.

இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால் முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணர்ந்தால் அவரிடம் எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் தயக்கமில்லை. முதல்வருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனமல்ல.

பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த ஒப்பீடும், மதிப்பீடும்தான். முதல்வர் பழனிசாமி மனம் காயப்பட்டது குறித்த எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருகிறேன்''.

இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.

இவ்வாறு விளக்கமளித்த அவர், 2 ஜி வழக்கில் இதேபோன்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வழக்குப் புனையப்பட்டதை நீதிபதி ஷைனி குறிப்பிட்டதை மேற்கோள் காட்டினார்.

என் மீது தொடுக்கப்பட்ட 2-ஜி வழக்கை விசாரித்த நீதிபதி சைனி, தனது தீர்ப்பின் கடைசி பக்கத்தில் இந்த வழக்கு எப்படி புனையப்பட்டது என்பதனை நான்கு ஆங்கில வார்த்தைகளால் முடித்தார். Misreading, Selective reading, Non-reading and Out of Context reading of files என்று குறிப்பிட்டார். கோப்புகளைத் தவறாகப் படித்ததாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில கோப்புகளைப் படித்ததாலும், சில கோப்புகளைப் படிக்காமல் விட்டதாலும், சில கோப்புகளை இடப்பொருத்தமற்று படித்ததாலும், ஏற்பட்டதே இந்த வழக்கு என்று சைனி குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட எனது 40 நிமிட உரையை முழுமையாக நீங்கள் கேட்டால், இதே தீர்ப்பை நீங்கள் வழங்குவீர்கள் என நம்புகிறேன் என்று ஆ.ராசா தெரிவித்தார்.

ஆ.ராசா மன்னிப்பு கோரியதை அடுத்து இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x