

தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால், ஆவடி தொகுதி தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி எம்ஜிஆர் மக்கள் கட்சி வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைத் தேர்தல் ஆணைய விளக்கத்தை ஏற்று தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.
சென்னை பட்டாபிராமைச் சேர்ந்தவர் எம்ஜிஆர் விஸ்வநாதன். இவர் எம்ஜிஆர் மக்கள் கட்சி என்கிற பெயரில் கட்சி நடத்துகிறார். இவரது கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. டார்ச் லைட் சின்னத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, தங்களது கட்சியின் டார்ச் லைட் சின்னத்தை சுயேச்சைகளுக்கு ஒதுக்கியதாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அப்போது தனக்கு வழங்கப்பட்ட சின்னத்தை விஸ்வநாதன் திருப்பி அளித்தார். தற்போது அவர், தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், “2016ஆம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தைத் திருப்பி அளித்துவிட்டு, எம்ஜிஆரை நினைவுபடுத்தும் வகையில் ஆட்டோ ரிக்ஷா, தொப்பி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தோம்.
ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இதில் ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆவடி தொகுதியில் பொதுச் சின்னப் பட்டியலில் ஆட்டோ ரிக்ஷா இருந்தும் அதை எங்களுக்கு ஒதுக்கவில்லை. அதனால் ஆவடி தொகுதி தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும். ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், இன்று (மார்ச் 29) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்னங்கள் கேட்பது மற்றும் ஒதுக்குவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால், மனுதாரர் கோரிக்கையைப் பரிசீலிக்க வாய்ப்பில்லை எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதை ஏற்று, ஆவடி தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிய எம்ஜிஆர் விஸ்வநாதன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.