

நிவர் புயல் நிவாரணம் கிடைத்ததா? புரெவி புயல் நிவாரணம் கிடைத்ததா? ஜி.எஸ்.டி. மூலம் மாநிலத்திற்கு வரவேண்டிய தொகை வந்ததா? 15-வது நிதிக்குழுவின் முரண் நீக்கப்பட்டதா? கரோனா காலத்தில் வர வேண்டிய நிதியாவது வந்ததா? எதுவும் இல்லை. பிறகு எதற்குக் கூட்டணி? என்ற கேள்வியைத் தான் நான் கேட்க விரும்புகிறேன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நேற்று சேலத்தில் நடந்த மதச்சார்பற்ற அணியின் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
“பழனிசாமியாக இருந்தாலும், பன்னீர்செல்வமாக இருந்தாலும் அவர்களுக்கு மக்களைப் பற்றிக் கவலை இல்லை. அவர்கள் நோக்கம் எல்லாம் பணம் தான் - ஊழல் தான் - கரப்ஷன் தான் - கமிஷன் தான் - கலெக்ஷன்தான்.
காவிரி உரிமையைத் தர முடியாத மத்திய அரசு, அந்த உரிமையைத் தட்டிக் கேட்க முடியாத தமிழ்நாட்டில் இருக்கும் மாநில அரசு. அதனால் தமிழகம் பாழ்பட்டு போயிருக்கிறது. ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினா, கூடங்குளம் போன்ற அணு உலைகள். சேலம் எட்டு வழிச் சாலை. இவையெல்லாம் மத்திய அரசு தமிழகத்தின் மீது நடத்தும் ரசாயனத் தாக்குதலாக அமைந்து இருக்கிறது.
இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, நீட் தேர்வைக் கொண்டுவந்தது, மத்திய அரசுப் பணிகளில் தமிழில் பேசக்கூடாது, தமிழகப் பணிகளில் வட மாநிலத்தவரைக் கொண்டு வந்து நுழைப்பது இவையெல்லாம் கலாச்சாரத் தாக்குதல்கள்.
எனவே இந்த ரசாயனத் தாக்குதலையும், கலாச்சாரத் தாக்குதலையும் மத்திய அரசு நம் மீது நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த ராசாயனத் தாக்குதலையும், கலாச்சாரத் தாக்குதலையும் எதிர்க்கும் ஆற்றல் திமுகவிற்கு உண்டு என்பதை இங்கு அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
அதிமுகவால் முடியவே முடியாது என்பதைக் கடந்த ஐந்து வருடங்களாக நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பாஜக வேரூன்ற முடியவில்லை. அதனால் அதிமுகவை மிரட்டி அச்சுறுத்தி அவர்கள் நிழலில் பயணம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடக்கும் எல்லா விஷயமும் பாஜகவின் சதிவேலைகள் என்பதை அடிக்கடி டெல்லியிலிருந்து பாஜகவின் தலைவர்கள் வந்து போகும் காட்சியைப் பார்க்கும்போது நமக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது.
முதல்வர் பழனிசாமி இப்போது தேர்தல் பிரச்சாரத்தில், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். அந்த இணக்கமான உறவை வைத்திருக்கின்ற காரணத்தினால்தான் தேவையான நிதியை மாநில அரசு பெற்றிருக்கிறது என்று ஒரு அபாண்டமான பொய்யை, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகக் கூறிக் கொண்டிருக்கிறார்.
வர்தா புயல் ஏற்பட்டபோது மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி 22,573 கோடி ரூபாய். ஆனால் வந்தது 266 கோடி ரூபாய். ஒகி புயல் வந்த நேரத்தில் மாநில அரசு மத்திய அரசிடம் கேட்ட நிதி 9,302 கோடி ரூபாய். ஆனால் வந்தது 133 கோடி ரூபாய். கஜா புயல் ஏற்பட்டபோது மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி 17,899 கோடி ரூபாய். ஆனால் அவர்கள் கொடுத்தது 1,145 கோடி ரூபாய்.
அதேபோல, நிவர் புயல் நிவாரணம் கிடைத்ததா? புரெவி புயல் நிவாரணம் கிடைத்ததா? ஜி.எஸ்.டி. மூலம் மாநிலத்திற்கு வரவேண்டிய தொகை வந்ததா? 15-வது நிதிக்குழுவின் முரண் நீக்கப்பட்டதா? கரோனா காலத்தில் வர வேண்டிய நிதியாவது வந்ததா? எதுவும் இல்லை. பிறகு எதற்குக் கூட்டணி? என்ற கேள்வியைத் தான் நான் கேட்க விரும்புகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.