

பெண்களை இழிவாகப் பேசுவது திமுகவுக்குப் புதிதல்ல என்று ராதிகா சரத்குமார் கூறினார்.
ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் விவேகானந்தனை ஆதரித்து அவர் நேற்று பிரச்சாரம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மற்றவர்களை இழிவாகப் பேசுவது திமுகவுக்குப் புதிதல்ல. அங்கு நிறைய பேர் இது மாதிரித்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் மத்திய அமைச்சராக இருந்த ராசா முதல்வரை தரக்குறைவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. அதிமுக, திமுகவில் பிரதான தலைவர்கள் இல்லை. திமுகவில் ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுகவிலும் தலைவர் என்று சொல்வதற்கு ஆளில்லை. அதிமுகவில் ஆளுமையான தலைமை இல்லை என்பது உண்மை.
இந்த தேர்தலில் 5 கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆரோக்கியமான போட்டிதான். இது மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வழிவகுக்கும். தமிழக மக்கள் யாருக்கும் விலை போகாமல் வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து விருதுநகர் தொகுதி சமக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.