

அரசியல் பணிகளை மேற்கொள்ள தொண்டர்களும், செல்வந்தர்களும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களால் கோரிக்கை விடுக்கப்படுவது வழக்கம். அதன்படி, செல்வந்தர்கள் பலரும் கோடிக்கணக்கில் கட்சிக்கு நிதி வழங்குகின்றனர். அந்த நிதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படுவதும், அந்த கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், அதற்கு நிதியுதவி அளித்த செல்வந்தர்கள் ஏதாவது ஒருவகையில் பயன்பெறுவதும் நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பெயரில் இயங்கும் சகாயம் அரசியல் பேரவை, வளமான தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து இத்தேர்தலில் கொளத்தூர் உட்பட 36 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சகாயம் அரசியல் பேரவை கூட்டணிக்கு இத்தேர்தலை எதிர்கொள்ள போதிய நிதி வசதி இல்லாததால் பொதுமக்களிடம் நிதி வழங்குமாறு கேட்டுள்ளனர்.
இதுகுறித்து சகாயம் அரசியல் பேரவை நிர்வாகி பாட்ஷா கூறுகையில், “மக்களிடம் நிதியுதவி கேட்டுள்ளோம். ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை பெற்றுக் கொள்கிறோம். ரூ.1 லட்சத்துக்கு மேல் நிதி வாங்கமாட்டோம்" என்றார்.