

எழும்பூர் தொகுதியில் கிரிக்கெட் போட்டிகளை போல் தொடர் வர்ணனையுடன் திமுக வேட்பாளர் பரந்தாமன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே எழும்பூர் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் இ.பரந்தாமன் போட்டியிடுகிறார். இவர்கள் கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே பிரச்சாரத்தின்போது பரந்தாமன் உடன் வாகனம் பின்தொடர்ந்து வருகிறது. அதில் பரந்தாமன் ஒவ்வொரு தெருவிலும் நுழைவது தொடங்கி, அங்குள்ள வாக்காளர்களிடம் பேசுவது, அவர்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களை தொகுத்து தொடர் வர்ணனையாக பின்னணியில் கட்சியினர் கூறிக்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், பிரச்சாரத்தின்போது வீதிகளில் கழிவுநீர் தேங்கிய பகுதியிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையிலும் ‘நம் ஆட்சியில் இவை சரிசெய்யப்படும்’ என வர்ணணையில் வாக்குறுதிகளை தெரிவித்து வருவது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.