

வரலாறு காணாத அளவுக்கு கடன் சுமையை அதிகரித்து தமிழகத்துக்கு தலைகுனிவை தேடித் தந்திருக்கிறது கடந்த 4 ஆண்டு கால ஆட்சி என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தமிழக அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் இடத்துக்குக் கொண்டு வந்த சாதனையை அதிமுக அரசு நிகழ்த்தி இருக்கிறது. மின்சாரக் கட்டணம், பேருந்துக் கட்டணம், பால் விலை போன்றவற்றைக் கடுமையாக உயர்த்தி, மக்களின் தலையில் பல ஆயிரம் கோடி ரூபாயை சுமத்திய பிறகும் கூட அதிமுக அரசால் நிதிநிலையைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
“ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்ற தலைக்குனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலைநிமிர்ந்து நிற்கவும் தன்மானத்துடன் வாழவும் நடவடிக்கை எடுப்போம்” என்று 2011 தேர்தல் அறிக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாக்குறுதி கூறி இருந்தார். ஆனால், வரலாறு காணாத அளவுக்குக் கடன் சுமையை அதிகரித்ததன் மூலம், தமிழகத்துக்குத் தலைக்குனிவைத் தேடித் தந்திருப்பதும், ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றி இருப்பதும் தான்அதிமுக ஆட்சியின் சாதனை.
உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போதும், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் (2006-2011) மக்கள் நலனுக்காகவும் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காகவும் செலவிடத் தயங்கவில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்காக, மத்திய அரசும் சட்டமும் நிர்ணயித்தவரம்புக்குள் திமுக ஆட்சியில் கடன் வாங்கிய காலங்களில் அதை அதிமுக கடுமையாக விமர்சித்தது.எள்ளி நகையாடியது.
“கடனாளி மாநிலம் என்பது தலைக்குனிவு” என்றும், “சிறப்புத் திட்டங்கள் மூலம் ஐந்தாண்டுகளில் ரூ1,20,000 கோடி அளவுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டுவோம்” என்றும் கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, தனது நிர்வாகத் திறமையின்மை காரணமாகவும், தலைவிரித்தாடும் ஊழல் காரணமாகவும் மாநிலத்தின் நிதிநிலையை மிகுந்த நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறது.
திமுக ஆட்சியை விட்டு விலகிய காலத்தில், அதாவது 2009-10-ம் நிதியாண்டில் மாநிலத்தில் கடன் சுமை ரூ.99,180 கோடியாக இருந்தது. உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது,மாநிலத்தில் செலவீனங்களை அதிகரிக்க கடன் வாங்குவது இன்றியமையாதது என்பதையும், கடன் வாங்கி மெட்ரோ ரயில், மருத்துவக் கல்லூரிகள், மேம்பாலங்கள், கூட்டு குடிநீர் திட்டங்கள், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள், புதிய தலைமைச் செயலகம், தொழில் நுட்ப பூங்காக்கள் என பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியதையும் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தின் கடன் சுமையானது 2014-15-ம் ஆண்டின் இறுதியில், தமிழகத்தின் கடன் சுமை 1,95,300 கோடியாக உயர்ந்திருக்கிறது. 2010-க்கும் 2015-க்கும் இடையிலான ஐந்தாண்டுகளில் கடன் வாங்கும் விகிதம் 92 சதவீத அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், வேறெந்த மாநிலமும் இந்த அளவுக்குக் கடன் வாங்கும் நெருக்கடியில் சிக்கிக் கொள்ளவில்லை என்றும் இந்தியாஸ்பெண்ட் என்ற பொருளாதார ஆய்விதழ் அதிர்ச்சியான விவரங்களை விரிவாக வெளியிட்டிருக்கிறது. அதிமுக அரசு தாக்கல் செய்த 2015-16க்குறிய நிதி நிலை அறிக்கையிலேயே 31.3.2016 அன்று தமிழகத்தின் கடன் 2,11,483 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது, தமிழகத்தின் குடிமக்களில் ஒவ்வொருவர் மீதும் சராசரியாக ரூ.28,778 கடன் சுமை இப்போதே ஏற்றப்பட்டிருக்கிறது. வேதனை அத்தோடு முடிவதாக இல்லை.
தொழில், பொருளாதார வளர்ச்சியில் கடைசியிடம்; கடன் வாங்குவதில் முதல் இடம் என்பது தமிழகத்துக்குத் தலைக்குனிவா? அல்லது தமிழர்களைத் தலைநிமிரச் செய்யும் செயலா? என்பதை முதல்வர் ஜெயலலிதா விளக்க வேண்டும். சிறப்புத் திட்டங்கள் மூலம் ரூ.1,20,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டதா என்பதையும், கடன் சுமையில் தமிழகம் தள்ளாடும் நிலை ஏற்பட்டிருப்பதற்கான காரணத்தையும் அதிமுக அரசு விளக்க வேண்டும். இந்த அளவுக்குக் கடன் வாங்கி அதிமுக அரசு செயல்படுத்திய மாபெரும் திட்டங்கள் என்ன என்பதை விளக்குவதற்குத் தமிழக அரசு கடமைப்பட்டிருக்கிறது.
வரிச்சுமையை பன்மடங்கு ஏற்றிய பிறகும் கடன் சுமை அதிகரித்திருப்பதற்கு, அதிமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை, சொந்த ஆதாயத்துக்காக வரிச்சலுகைகள் தருவதில் தாராளம், மிதமிஞ்சிய ஊழல் ஆகியவையே காரணம்.
இதில் ஆராயப்பட வேண்டிய மற்றொரு வேதனைக்குரிய செய்தி, வட்டித் தொகையைச் செலுத்தக் கூட அரசு கடன் வாங்குகிறது என்பதும், அதுவும் 8.5 சதவீத கடும் வட்டிக்கு அரசு கடன் வாங்கும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது என்பது தான். இந்த அளவுக்கு மிக அதிக வட்டிக்கு தமிழகம் முன்னெப்போதும் கடன் வாங்கியதில்லை. கடனைச் செலுத்துவதில் இந்தளவு தடுமாறியதும் இல்லை.
அதிமுக ஆட்சியாளர்களின் கையாலாகத்தனத்தால் ஏற்பட்டிருக்கும் இந்த நிதி நெருக்கடி, தமிழகத்தின் வளர்ச்சியை எதிர்காலத்தில் கடுமையாகப் பாதிக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது. கடனைத் திருப்பித் தரும் நிலையில் மின் வாரியம் இல்லை என்று கடன் ஆய்வு அமைப்பு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஆகவே, அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்படும். வட்டிச் சுமையும் பன்மடங்கு உயரும்.
வளர்ச்சித் திட்டங்களுக்கும் சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிட முடியாத நிலையை ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கும் அதிமுக அரசு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி விட்டது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அதிமுக அரசுக்கு இருக்கிறது. ஆனால், முதல்வர் ஜெயலலிதாவோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாகவே தெரியவில்லை என்பது தான் தமிழகத்தின் துயரம்.
இவ்வாறு கூறியுள்ளார் ஸ்டாலின்.