

அடுக்குமாடி கட்டிட விபத்துகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
சென்னை போரூர் அருகே 11 மாடிக் கட்டிடம் முழுவதும் இடிந்து சரிந்து விழுந்ததில், இதுவரை 11 பேர் வரை இறந்து விட்டதாகவும், பலர் கடும் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டிருப் பதாகவும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று அனைவரும் உயிருடன் மீட்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருவோர், விரைவில் முழு குணமடைந்து திரும்ப வேண்டும். அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையின் மிகப் பெரிய கட்டிட விபத்து இது எனச் சொல்லப்படுகிறது. விபத்துக்கான காரணத்தை நன்கு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, இதுபோன்ற அதிர்ச்சி தரத்தக்க கொடும் சம்பவங்களை கட்டாயம் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரண நிதி உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.