

முதல்வர் பழனிசாமியை தரக் குறைவாக பேசிய திமுகதுணைப் பொதுச் செயலர் ஆ.ராசாவைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக மகளிர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கில் மார்ச் 26-ல் நடந்த பிரச்சாரத்தில் ஆ.ராசா முதல்வர் பழனிசாமியை தரக் குறைவாக விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டுஅருகே நேற்று அதிமுக மகளிர்அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலையப் பேச்சாளர் அம்புஜம், அதிமுக மகளிர் அணிநிர்வாகிகள் ஆ.ராசாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பழநி அருகே நெய்க்காரப் பட்டியிலும் மதுரை முனிச்சாலையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஆரப்பாளையத்தில் மகளிர் அணி இணைச் செயலாளர் பாண்டிச் செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜீவா நகரில் மகளிர் அணி மாவட்டச் செயலர் சுகந்தி தலைமையிலும் கூடல்புதூரில் பகுதிச் செயலர் கோபி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் ஆர்ப்பாட்டம்
மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே வடக்கு 1-ம் பகுதி செயலர் ராஜலெட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழையபேருந்து நிலையம் அருகே அதிமுக மகளிர் அணியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஆலங்குளம் ஆகிய இடங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோபிக்கு பிரச்சாரத்தில் ஈடுபட நேற்று வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அதிமுகமுன்னாள் நகராட்சி தலைவர்கந்தவேல் முருகன் தலைமையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டு, ஆ.ராசாவை கண்டித்து முழக்கமிட பேருந்து நிலைய பகுதியில் கூடியிருந்தனர். அங்கிருந்து ஸ்டாலின் பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூரில் நகரச்செய லாளர் டி.டி.குமார் தலைமையிலும், வாணியம்பாடியில் கோ.வி.சம்பத்குமார் தலைமையிலும், ஆம்பூரில்அதிமுக நகரச் செயலாளர் மதியழகன் தலைமையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் முழக்கம்
செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தலைமையில் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து மறைமலை நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுராந்தகம், திருக்கழுக்குன்றத்திலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கை கிழக்கு மாவட்டச் செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வேட்பாளர்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், செய்யூர் கனிதா சம்பத் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காஞ்சி மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி, மன்னார் குடி ஆகிய இடங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் அதிமுக நகரச் செயலாளர் சோமுரவி தலைமையில் நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டு ஆ.ராசாவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.கரூர், அரவக்குறிச்சி, வெள்ளியணை, மணவாசி உள்ளிட்ட இடங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.