

முதல்வர் பழனிசாமி நேர்வழியில் ஆட்சிக்கு வந்தவர் அல்ல, குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தவர் என்பதற்காக கூறிய கருத்தை திரித்து, பிரித்து அவரது தாயை கொச்சைப்படுத்தியதாக கூறும் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நீலகிரி எம்.பி. ஆ.ராசா கூறினார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.காசிலிங்கத்தை ஆதரித்து கூடலூரில் அவர் பேசியதாவது:
தமிழகத்திலுள்ள பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி என செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஸ்டாலின் என்பவர் சிறுவயதில் மிசாவில் சிறை சென்று படிப்படியாக கட்சியில் வளர்ந்து, இன்று கட்சித் தலைவராகவும், அரசுப் பணியில் மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என்று பல பதவிகளைப் பெற்று அனுபவசாலியாகவும் திகழ்கிறார்.
முதல்வர் பழனிசாமி குறுக்கு வழியில் முதல்வரானார் என்று நான் கூறிய கருத்தை, சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திரித்து, முதல்வரின் பிறப்பு மற்றும் அவரது தாயாரை குறித்து கொச்சைப் படுத்தி பேசியதாக பரப்பியுள்ளனர். ஆனால், கருணாநிதியின்மீது ஆணையாக நான் அப்படி பேசவில்லை.இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின்போது மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பொறுப்பாளர் தண்டபாணி, நகரச் செயலாளர் ராஜேந்திரன் , தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ் , மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.