

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கோவை தெப்பக்குளம் மைதானத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பொதுவாழ்வில் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் வானதி சீனிவாசன். தொகுதி மக்களின் பிரச்சினைகளை அறிந்தவர். அதற்கேற்றவாறு சட்டப்பேரவையில் பேசி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியவர். அவர் வெற்றிபெற்றால் இந்த தொகுதிக்கு 100 சதவீதம் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் வந்து சேரும். தமிழக அரசு மத்திய அரசின் பேச்சை கேட்டு வருகிறது என்ற தவறான தகவலை திமுகவினர் மக்களிடம் பரப்பி வருகின்றனர். மகளிரின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்.
மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. எனவே, வானதி சீனிவாசனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இந்த தொகுதியை இந்தியா உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இங்கு இயல்பாக அல்லாமல், செயற்கையாக போட்டியை ஏற்படுத்தியுள்ளனர். அதை முறியடித்து, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். வானதி சீனிவாசனின் வெற்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கான வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.