

அதிமுக, திமுகவும் இலவசம், ஊழல்களை பற்றி மட்டும் தான் பேசுகிறது. ஆனால், தேமுதிக மட்டும் தான் மக்களைப்பற்றி பேசுகிறது, என தருமபுரி, நாமக்கல்லில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் மகன் விஜய பிரபாகரன் பேசினார்.
நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வியை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்று முன்தினம் இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
தேமுதிக போட்டியிடும் 60 தொகுதியிலும் சொந்த தொகுதிவேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள் ளனர். பிரமலதா இந்த தேர்தலில் அதிக வாக்குகளில் வெற்றி பெறுவார். இக்கூட்டணி மக்களுக் காக உருவாக்கப்பட்டது.
அதிமுக துரோகத்தால் உருவாக்கப்பட்ட கூட்டணி தான் அமமுக, தேமுதிக கூட்டணி. பாஜக, பாமககூட்டணியை குறைவாக சொல்லவில்லை.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாகத் தான் தேமுதிக உருவாக்கப்பட்டது. ஆனால், மக்கள்சரியான அங்கீகாரம் கொடுக்காததால் கூட்டணி என்பது வைக்கப் பட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேமுதிக தலைவர் உதவி செய்து வருகிறார்.
அதிமுக, திமுகவும் இலவசம், ஊழல்களைப் பற்றி மட்டும் தான் பேசுகிறது. ஆனால், தேமுதிக மட்டும் தான் மக்களைப் பற்றி பேசுகிறது. லஞ்சம், ஊழலுக்கும் அப்பாற்பட்ட கட்சி தான் தேமுதிக. மக்கள் அங்கீகாரத்திற்கு தான் கூட்டணி வைக்கிறோம். எங்கள்சுய லாபத்திற்காக கூட்டணி வைக்கவில்லை. அன்றாடம் இலவசங் களுக்கு விலைபோனால் அந்தக்கடவுளே நினைத்தால் கூட மக்களை காப்பாற்ற முடியாது, என்றார். கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்தின் கனவு
தமிழக மக்களை இலவசங்களிலேயே முடக்கப் பார்க்கிறார்கள் என தருமபுரி பிரச்சாரத்தில் தேமுதிக விஜயபிரபாகரன் பேசினார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணியில் தேமுதிக-வைச் சேர்ந்த உதயகுமார் போட்டியிடுகிறார். பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் விஜயசங்கர் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு கேட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நேற்று வாகனத்தில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
மக்களுக்கு போதுமான தண்ணீரே இல்லை, வாஷிங்மெஷின் எதற்கு? இலவசங்களிலேயே மக்களை முடக்குகிறார்கள். இந்த தேர்தலுடன் தேமுதிக காணாமல் போய்விடும் என்கிறார்கள். தமிழக மக்களை தங்கத் தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்பது தலைவர் விஜயகாந்தின் கனவு. அதை நிறைவேற்றவே நான் களத்துக்கு வந்துள்ளேன். அதற்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.