சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம்: மதிமுக வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி

மதுராந்தகம்(தனி) சட்டப்பேரவை தொகுதியின் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா படாளம் கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.
மதுராந்தகம்(தனி) சட்டப்பேரவை தொகுதியின் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா படாளம் கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.
Updated on
1 min read

மதுராந்தகம்(தனி) சட்டப்பேரவை தொகுதியில் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்(தனி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா போட்டியிடுகிறார். அவர் படாளம், பழையனூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மல்லை சத்யா பேசியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி, 650 மில்லியன் கன அடியாக இருந்தது. ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி தூர்வாரப்படாமல் இருப்பதால் 500 மி.க. அடியாக குறைந்துள்ளது. இதனால், இப்பகுதியில் மூன்று போகம் என்ற நிலையில் இருந்த விவசாயம், ஒரு போகமாக குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் அதிமுக அரசு, தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக ரூ.150 கோடி ஒதுக்கப்படும் என அறிவிப்பு மட்டும் வெளியிட்டு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.

மேலும், இப்பகுதியில் விளைவிக்கப்படும் நெல் உள்ளிட்ட விளைபொருட்களை பாதுகாக்க போதிய கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், விளைபொருட்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்து வீணாகப்போகும் நிலை உள்ளது. படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முற்றிலுமாக இல்லை. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடக்க முயலும் நபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால், மதுராந்தகம் தொகுதியில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் (சிப்காட்) தொழிற்பேட்டை மற்றும் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். அதேபோல், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in