

துறைமுகம் தொகுதிக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் நேற்று வெளியிட்டார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் துறைமுகம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
குடிசைப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிபவர்களுக்கு பட்டா வழங்கப்படும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் குடிசை பகுதி மக்களுக்கு அந்தந்த பகுதிகளிலேயே வீடு கட்டித் தரப்படும். யானைக்கவுனி மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க முயற்சிக்கப்படும். பர்மா பஜார், பூக்கடை, சவுக்கார்பேட்டை போன்ற பகுதிகளில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.
ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 750 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி மாணவர்களுக்கு நல்ல கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் பி.செல்வம், “துறைமுகம் தொகுதி திமுகவின் கோட்டை என்று சொல்கின்றனர். ஆனால், திமுக எப்போதுமே குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் அங்கு வெற்றி பெற்றுள்ளது.
என்னுடைய தேர்தல் அறிக்கையின்படி இந்த தொகுதியை சிங்கப்பூர் போல் மாற்ற முடியாது. ஆனால், தியாகராயநகர் தொகுதியை போல் மாற்ற முடியும். மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.