Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

ஆலந்தூரில் போட்டியிடும் மநீம கட்சி வேட்பாளர் சாமானிய இளைஞரின் அரசியல் கனவு அங்கீகரிக்கப்படுமா?

சென்னை மடிப்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவர் சரத்பாபு(41). இவரது தந்தை ஏழுமலை, தாய் தீபா ரமணி. மிகவும் ஏழ்மையான குடும்பம். தந்தையின் ஆதரவின்றி, தாயின் அரவணைப்பில் பொறியியல் படிப்பும், எம்பிஏ படிப்பும் முடித்தார்.

தனது தாய் இரவில் தண்ணீர் மட்டுமே குடித்து, வாழ்க்கையை தியாகம் செய்து தம்மை உயர்த்தியதை நினைத்து, தாய்க்கு ஓய்வு கொடுக்கும் வகையில், அவரது இட்லி வியாபாரத்தை கையிலெடுத்து தொழில் செய்ய ஆரம்பித்தார். அதன் மூலம் இளம் தொழில் முனைவோருக்கான பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

தனது தாயைப் போல, இந்தியாவில் சுமார் 30 கோடி மக்கள் இருவேளை உணவு இல்லாமல் இருப்பதை அறிந்து, அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி அறக்கட்டளையை நிறுவி கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகிறார்.

எளிய மக்களின் வாழ்வை வறுமையில் இருந்து மீட்டெடுக்க தனிப்பட்ட முயற்சி பெரிதளவு உதவி புரியாது என்பதை உணர்ந்து அரசியலில் ஈடுபட எண்ணி, கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை வேட்பாளராக சுயேச்சையாக போட்டியிட்டு சுமார் 17,582 வாக்குகளை பெற்றார். 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 7,472 வாக்குகள் பெற்று அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்தார். அதைத் தொடர்ந்து மேயர் தேர்தலிலும் சுயேச்சையாக போட்டியிட்டார்.

தற்போது மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 2 முன்னாள் அமைச்சர்களை எதிர்த்து களம் காண்கிறார். தொகுதி முழுவதும் நடந்தே சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

ஆடம்பரமாய் வாழ்ந்துவரும் அரசியல்வாதிகள் மத்தியில் படித்து, உழைத்து வாழ்வில் உயர்ந்தாலும், இன்றளவும் குடிசையில் வாழ்ந்து ஏழைகளின் வாழ்வை அரசியல் களம் கண்டு மாற்றத் துடிக்கும் இந்த இளைஞனை வெற்றியடைய செய்து நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களை அரசியலுக்கு அழைக்கும் தருணமாக மாற்றுவோம். நாளை நமதே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x