காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா: தங்க இடப வாகனத்தில் சுவாமி வீதியுலா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை ஒட்டி தம்பதி சமேதராக ஏகாம்பரநாதர் தங்க இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை ஒட்டி தம்பதி சமேதராக ஏகாம்பரநாதர் தங்க இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவுக்கு பிறகு தம்பதி சமேதராக தங்க இடப வாகனத்தில் ஏகாம்பரநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா கடந்த 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களின் மீது சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், கச்சபேஸ்வரர் கோயில் அருகே வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், நேற்று அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். ஆனால், கரோனா தொற்று அச்சம் காரணமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் ஆயிரம்கால் மண்டபத்தில் 200 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால், பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனிடையே உற்சவத்துக்காக ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்பாள் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருள்வதற்காக வந்தனர். அப்போது, பக்தர்கள் சுவாமியை பின்தொடர்ந்து ஆயிரம்கால் மண்டப வளாகத்தில் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுக்க முயன்றதால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பின்னர், திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து தம்பதி சமேதராக ஏகாம்பரநாதர் தங்க இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், ராஜவீதிகளில் வீதியுலா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என போலீஸார் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாளை (மார்ச் 30) சர்வதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in